இனி Work From Home கிடையாது.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிசிஎஸ் நிறுவனம்

கோவிட் தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் என்று வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை இன்று வரை ஒரு சில நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் ஹைபிரிட் வொர்க் பிளேஸ் என்ற, சில நாட்கள் அலுவலகத்திலும், சில நாட்கள் வீட்டிலிருந்தும் வேலை பார்க்கும் முறையை அமல்படுத்தி உள்ளது. இருப்பினும், பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த முறையை முழுவதுமாக ரத்து செய்து, அனைத்து ஊழியர்களுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டுள்ளன. அதில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-ம் ஒன்று. இனி ஊழியர்கள் அனைவரும் வார நாட்கள் முழுவதும் அலுவலகத்துக்கு வந்து தான் பணியாற்ற வேண்டும் என்ற அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல், நிறுவனத்தின் பல்வேறு பிரிவில், பல குழுக்களாக பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் இதைப் பற்றிய செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனம் இதைப் பற்றி அதிகாரபூர்வமாக ஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் ஊழியர்களுக்கு சொல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வேலைக்கு வருவதற்கு நிறுவனத்தின் தரப்பில் கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘இந்த விஷயம் பற்றி தற்போதும் எதையும் உறுதியாக கூற முடியாது’ என்று தெரிவித்தார். நிறுவனம் இரண்டாம் காலாண்டின் வருமானத்தை அக்டோபர் 11 அன்று வெளியிடும் என்றும் கூறப்பட்டது. எகனாமிக் டைம்ஸ்க்கு தெரிவிக்கப்பட்ட விவரங்களின் படி, நிறுவனத்தின் ஒரு சில பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கு, ஹைப்ரிட் மோடு கட்டாயமாக நிறுத்த வேண்டும் என்று தகவல் கூறப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகளில், வாரம் 3 நாட்களுக்கு அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற முறையை பின்பற்றுகின்றனர்.

பெரும்பாலான ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரத் தயாராக இருந்தாலும், ஹைப்ரிட் முறை என்ற ஆப்ஷனையும் விரும்புகிறார்கள். ஐடி நிறுவனங்கள், உற்பத்தி குறைபாடுகள் நீக்குவது மற்றும் குழுவாக இணைத்து செயல்படுவது உள்ளிட்டவற்றை மேம்படுத்த முடியும். எனவே, இந்த இரண்டு முக்கிய காரணங்களுக்க்காகவும், ஊழியர்கள் அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதை செயல்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு, செப்டம்பர் 2022 அன்று வெளியானது. ஆனால் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Previous Post Next Post