ஐடியா புதுசு; இளநீர் ஜூஸ் ... தினமும் 800 ரூபாய் வருமானம் வருது!

“கடந்த 29 வருஷமா பஸ்பாடி கட்டும் தொழிலாளி, சில்லி சிக்கன் போடும் மாஸ்டர், டீ மாஸ்டர், டீக்கடை, பிரியாணி கடை ஓனர், ஜவுளி வியாபாராம், ஐஸ் வியாபாரம்னு நான் பார்க்காத வேலை/தொழில் இல்லை. ஆனால், அத்தனையும் எனக்கு பெரிசா கைகொடுக்கலை. பொருளாதார ரீதியாக என்னை கைதூக்கிவிடலை.

இளநீர் ஜூஸ் விற்பனை செய்யும் அக்கீம்

வித்தியாசமா ஏதாச்சும் பண்ணலாம்னு நினைச்சு, கடந்த ஆறு மாதமா இந்த இளநீர் ஜூஸை வித்துக்கிட்டு இருக்கிறேன். இதுதான், எனக்கு நம்பிக்கைத் தரும் தொழிலாக மாறியிருக்கு” என்று உற்சாகமாக பேசுகிறார் அக்கீம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்த அக்கீம், வண்டியில் ஐஸ்பெட்டியில் இளநீர் ஜூஸ் அடைக்கப்பட்ட புட்டிகளை வைத்துக்கொண்டு, கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்ருந்தார். அவரை யதேச்சையாக பார்த்த நாம், ‘இளநீர் ஜூஸ் என்பது புதிதாக தெரிகிறதே’ என்ற ஆவலில், அவரை பின்தொடர்ந்தோம். நாமக்கல் ஆட்சியர் அலுவலம் முன்பு வண்டியை நிறுத்திய அக்கீம், அங்கு வைத்து ‘போணி’யை ஆரம்பித்தார். அவரிடம் ஓர் இளநீர் ஜூஸை வாங்கிப் பருகினோம். வயிற்றுக்கும், மனதுக்கும் இதமாக இருந்தது. அதன்பிறகு, ‘எப்படி இந்த யோசனை வந்தது?’ என்று அவரிடம் கேட்டோம். ஆர்வமாக நம்மிடம் பேசிய அவர்,

இளநீர் ஜூஸ் விற்பனை செய்யும் அக்கீம்

“எனக்கு வயது 42. மனைவி, இரண்டு பிள்ளைகள்னு குடும்பம். ஆனால், வறுமையான சூழல். சொந்தமா வீடுகூட இல்லை. இப்போதும் வாடகை வீட்டுலதான் வசிக்கிறோம். நாலாவது வரை படித்த நான், என்னோட 13 – ம் வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டி வேலைக்கு போகவேண்டிய சூழல். 5 வருஷம் கரூர்ல பஸ்பாடி கட்டும் கம்பெனியில வேலைப் பார்த்தேன். அதன்பிறகு, பரமத்தி வேலூர்ல உள்ள ஒரு ஹோட்டல்ல சில்லி சிக்கன் போடும் மாஸ்டராக இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். வேலை நேரம் அதிகம். ஆனால், போதிய சம்பளம் கிடைக்கலை.

இதனால், கடந்த 2004 -ம் வருஷம் பரமத்தி வேலூர்ல உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலையில் சேர்ந்தேன். பன்னிரெண்டு மணி நேரம் வேலை. தினமும் ரூ. 110 சம்பளம் கொடுத்தாங்க. அந்த வருமானமும் போதவில்லை. அதனால், 2010 – ம் வருஷம் சொந்தமாக இரண்டு இடத்துல அடுத்தடுத்து டீக்கடை, பிரியாணி கடைனு இரண்டு வருஷங்களில் சொந்தமாக வைத்துப் பார்த்தும், புண்ணியமில்லை. ரூ. 50,000 – க்கு மேல நஷ்டப்பட்டதுதான் மிச்சம். அதனால், மறுபடியும் கரூர், பரமத்தி வேலூர், நாமக்கல்னு பல இடங்களில் உள்ள டீக்கடைகளில் தொடர்ந்து அடுத்தடுத்து டீமாஸ்டராக வேலைப் பார்த்தேன். ஆனால், தினமும் 8 மணி நேரம் வேலை. தினசம்பளமா ரூ.600 வரை கொடுத்தாங்க. அதனால், ‘இவ்வளவு வருஷம் உழைச்சும், வாழ்க்கையில் உருப்படியா எதையும் பண்ணமுடியலை, முன்னுக்கு வரமுடியலையே’னு மருகிப்போனேன்.

இளநீர் ஜூஸ் விற்பனை செய்யும் அக்கீம்

இந்நிலையில், கடந்த எட்டு மாசத்துக்கு முன்னாடி டீ மாஸ்டர் வேலையை உதறிட்டு, ஐஸ் விற்க ஆரம்பிச்சேன். பரமத்தி வேலூரைச் சுற்றியுள்ள 40 கிலோமீட்டர்ல உள்ள ஊர்களுக்குப் போய் விற்பனை செஞ்சேன். இரண்டு மாசம் நல்லா வருமானம் வந்துச்சு. அதன்பிறகு, கொஞ்சம் டல் அடிச்சுச்சு. அதனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஐஸ் விற்பனை பண்ணிட்டு, மத்த நாட்களில் சுத்தியுள்ள ஊர்களுக்குப் போய் வண்டியில் வைத்து ஜவுளி வியாபாரம் பண்ணினேன். ஆனால், ரூ. 15,000 நட்டமானது. இந்த சூழலில்தான், ‘வித்தியாசமா ஏதாச்சும் பண்ணி சாதிப்போம்’னு நினைச்சேன். அப்போதுதான், இளநீரை ஜூஸாக்கி விற்பனை செய்யும் ஐடியா வந்துச்சு.

முதல்ல, இளநீர் கடைதான் போட நினைச்சேன். ஆனா, ஏற்கனவே தெருக்கு நாலு இளநீர் கடைகள் இருந்ததால், அதில் இருந்து வித்தியாசமாக ஜூஸ் தயாரிச்சு விற்க நினைச்சேன். எனக்குத் தெரிந்த 4 இளநீர் கடைக்காரங்ககிட்ட இளநீரை வாங்கி, அதை ஜூஸாக்கி விற்க ஆரம்பிச்சேன். ‘நல்ல முயற்சி’னு பலரும் சப்போர்ட் செய்ததால், இப்போது இந்த தொழில் எனக்கு கைகொடுக்க ஆரம்பிச்சிருக்கு. இரண்டு இளநீர்களை வாங்கினால், அதில் மூன்று புட்டி ஜூஸ் தயாரிக்கலாம். முதல்நாளே தேவையான இளநீரை வாங்கிருவேன். விடிந்ததும், நானும், என் மனைவியும் சேர்ந்து எல்லா இளநீர்களையும் வெட்டி, அவற்றில் உள்ள இளநீர் தண்ணிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்வோம்.

இளநீர் ஜூஸ் விற்பனை செய்யும் அக்கீம்

தொடர்ந்து, அந்த இளநீர் காய்களில் உள்ள வழுக்கை முழுதையும் சுரண்டி எடுத்துக்குவோம். அப்படி எடுக்கப்பட்ட வழுக்கைத் தேங்காய் முழுதையும் மிக்ஸியில் போட்டு, மை மாதிரி அரைத்துக்கொள்வோம். பிறகு, அதை இளநீர் தண்ணீரில் கொட்டி, கரண்டியால் கலக்கிவிடுவோம். 70 இளநீர்கள் வரை இப்படி ஜூஸ் கலவை செய்தால், அதற்கு அரை கிலோ சீனியை சேர்த்து, அதை புட்டிகளில் அடைத்து, ஐஸ் பெட்டியில் வைத்துக்கொண்டு வண்டியில் விற்பனைக்கு கிளம்பிவிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

அங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள் பலரும், ‘இது என்ன இளநீர் ஜூஸ்னா, இதை எப்படி செய்றீங்க?’னு ஆர்வமா கேட்டு வாங்கி குடிக்க ஆரம்பிச்சாங்க. அதோடு, ‘டேஸ்ட் நல்லா இருக்கு’னு பாராட்டியதோடு, ரெகுலராக வந்து என்கிட்ட இளநீர் ஜூஸ் கேட்டு வாங்கி குடிக்க ஆரம்பிச்சாங்க. தவிர, ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும் இளநீர் ஜூஸை விரும்பி குடிக்க ஆரம்பிச்சாங்க. இதைத்தவிர, நாமக்கல்லில் உள்ள 5 கடைகளில் 20 இளநீர் ஜூஸ் புட்டிகளை ரெகுலராக வாங்கி விற்பனை செய்ய ஆரம்பிச்சாங்க. நான் காலையில் ஒன்பதரை மணிக்கு இங்கே வந்தேன்னா, மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குக் கிளம்பிருவேன். தினமும் 70 இளநீர் ஜூஸ் புட்டிகள் வரை விற்பனையாகுது.

இளநீர் ஜூஸ் விற்பனை செய்யும் அக்கீம்

ஒரு புட்டி இளநீர் ஜூஸை ரூ. 35 என்று விலை வைத்து விற்பனை செய்கிறேன். ஐஸ் பெட்டியில் வைத்திருந்தால், இந்த ஜூஸை 24 மணி நேரம் வரை வைத்து குடிக்கலாம். ஆனால், வெளியில் வைத்திருந்தால், மூன்று மணி நேரம் வரையே வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அது கெட்டுப்போய்விடும். இளநீர் ஜூஸ் குடிப்பதால் உடல்சூடு தணியும். பொட்டாசியம் இருப்பதால், கை, கால் குடைச்சல் தீரும். அதனால், இதோட மகிமைகள் தெரிஞ்ச பலரும் இதை ஆர்வமாக வாங்கி பருகுறாங்க.

மூலப்பொருள் வாங்கும் செலவு, வண்டிக்கு பெட்ரோல் செலவு, சாப்பாடு செலவுகள் போக இப்போதைக்கு எனக்கு மாதம் ரூ. 25,000 லாபம் கிடைக்குது. இதைத்தவிர, வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஐஸ் வியாபாரத்துக்குப் போகிறேன். எல்லாவற்றையும்விட, இப்போது, யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. நானே ராஜா, நானே மந்திரினு போதிய வருமானத்தை ஈட்டத் தொடங்கியிருக்கிறேன்.

இளநீர் ஜூஸ் விற்பனை செய்யும் அக்கீம்

நாமக்கல்லில் உள்ள கடைகளில் போய் அணுகி, அவர்கள் மூலமாக இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்த இளநீர் ஜூஸை விற்பனை செய்யும் முயற்சியில் இருக்கிறேன். தவிர, தமிழ்நாடு முழுக்க இந்த இளநீர் ஜூஸ் விற்பனையை அதிகப்படுத்த முடியும்ங்கிற நம்பிக்கையும் ஏற்பட்டியிருக்கு. இந்த இளநீர் ஜூஸ் ஐடியா, என் வாழ்க்கையை வசந்தமாக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு. இந்த ஜூஸை யார் வேண்டுமானாலும் எளிதாகச் தயாரிக்கலாம். அதன்மூலம், அவர்களும் வருமானம் ஈட்ட முடியும்” என்று உற்சாகமாக கூறி முடித்தார்.

Previous Post Next Post