பட்ஜெட் விலையில் அதிக மொபைல்கள்... இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் திட்டம்!

சீன நிறுவனமான இன்ஃபினிக்ஸ் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேட்ஜெட்டுகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்துவருகிறது. உள்நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை மதிப்பில் 10 விழுக்காட்டை நெருங்கி வருவதாக இன்ஃபினிக்ஸ் இந்திய தலைவர் அனீஷ் கபூர் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், கூடுதல் அம்சங்கள் அடங்கிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலைக்கு பயனர் சந்தைக்குக் கொண்டு வருவது தான். இந்த சூழலில் நிறுவனம், பட்ஜெட் விரும்பிகளை கவர, அதிக அளவிலான நடுத்தர ஃபோன்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

நடுத்தர மொபைல்கள், பிரீமியம் நடுத்தர போன்களுக்கு இந்திய பயனர்களிடத்தில் அதிகம் வரவேற்பு இருப்பதாக பல தரவுகள் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த வாய்ப்பை Infinix நிறுவனம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னாள் பேசிய நோக்கியா தலைவர், இந்தியாவில் நடுத்தர போன்களுக்கான தேவைதான் அதிகளவில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே தாங்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீன நிறுவனமும் அதே முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் ரூ.15,000 விலை தொகுப்பில், பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை சந்தைக்குக் கொண்டுவருவதில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனம் பட்ஜெட் பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெறும் ரூ.17,999 என்ற விலையில் உள்நாட்டுச் சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. தங்களது ஜிடி10 ப்ரோ ஸ்மார்ட்போன், மீடியாடெக் டிமென்சிட்டி 8050 கேமிங் சிப்செட், சிறந்த இயங்குதள அனுபவத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் தாய் நிறுவனமான Transsion, ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2 கோடி யூனிட் ஏற்றுமதிகளுடன் 22 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக இன்பினிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்ஷன் ஹோல்டிங்ஸ் கீழ் இயங்கும் டெக்னோ, ஐடெல் போன்ற பிராண்டுகள், ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா போன்ற பகுதிகளில் செயல்படும் முதல் 5 முன்னணி பிராண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது என்றும் அனீஷ் கபூர் பெருமிதம் கொண்டுள்ளார்.

டிரான்ஸ்ஷன் நிறுவத்திற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் அதிக சந்தை மதிப்பு இருந்தாலும், இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நிறுவனம் கண்டுவருகிறது. இதன் காரணமாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்க இந்நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது. கிட்டத்தட்ட 10 விழுக்காடு சந்தை மதிப்பை நெருங்கிவிட்டதாகக் கூறும் நிறுவனம், வரும் காலங்களில் அதை பன்மடங்காக உயர்த்த திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நொய்டாவில் உள்ள டிரான்ஸ்ஷன் ஹோல்டிங்ஸ் தொழிற்சாலையில் இந்தியாவில் தனது போன்களை உற்பத்தி செய்வதாக Infinix தெரிவித்துள்ளது. “லேப்டாப்களைத் தவிர, நிறுவனம் விற்கும் ஒவ்வொரு தயாரிப்பும், அது ஸ்மார்ட்போன்கள் அல்லது ஸ்மார்ட் டிவிகளாக இருந்தாலும், நாங்கள் அதை இந்தியாவிலேயே தயாரிக்கிறோம்,” என்று கபூர் கூறுகிறார்.

இதையும் படிங்க : 5G மொபைல்களுக்கு அதிரடி தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளி வீசும் பிளிப்கார்ட்!

சமீபத்தில் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களின் இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியது. சரியான உரிமம் இருந்தால் மட்டுமே இறக்குமதி செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவை தளமாகக் கொண்ட டிரான்ஸ்ஷன் ஹோல்டிங்ஸ் 70 நாடுகளில் தனது பொருள்களை சந்தைப்படுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்காவில் மட்டும் 40% சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Previous Post Next Post