சொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, 2016-21-ம் காலகட்டத்திற்குள் தனது பெயரிலும், தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயர்களிலும் வருமானத்துக்கு அதிமாக ரூ.27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

அதன்பேரில் கடந்த 2021 அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.23,85,700 ரொக்கப்பணம், தங்க நகைகள், கனரக வாகனங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளும் கைப்பற்றதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தான், கடந்த 2021-ல் விஜயபாஸ்கர் மற்றும் அவர் பங்குதாரராக உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35,79,90,000 வரையிலும் சொத்து சேர்த்ததாக 2021 அக்டோபர் 17-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதில், அவரது மனைவி ரம்யா பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் 22-ம் தேதி,லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்,புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீதான 216 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, நீதிமன்றம் மூலம் விஜயபாஸ்கருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், விஜயபாஸ்கர் கடந்த 5-ம் தேதி ஆஜராகினார். இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதி, விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யா இருவரும் நேரில் ஆஜராக புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Previous Post Next Post