அன்றொரு நாள் காலையில்! - திக் திக் அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

வழக்கம்போல் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலைபொழுது..

என் அத்தை சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். நான் துணிகளை துவைக்கச் சென்றேன். வார நாட்களில் வேலைக்குச் சென்று விடுவதால் அழுக்குத் துணிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் தான் ஏறெடுத்துப் பார்க்க முடிகிறது.

வாஷிங் மெஷினில் துணியைப் போட்டு விட்டு சிறு சிறு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தேன். முதல் சுற்று துணி ஓடி முடித்ததும் இரண்டாவது சுற்றில் மீதமுள்ள துணிகளை போட்டுவிட்டு துவைத்த துணிகளை காய வைத்துக் கொண்டே அன்று என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்.. வெளியில் செல்ல வேண்டிய வேலை இருக்கிறதா என்றெல்லாம் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.

Representational Image

பின் அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். இரண்டாவது சுற்றும் ஓடி முடித்து விட்டதாய் வாஷிங் மெஷின் சத்தமிட்டது.

வழக்கமான நாள் தான்… வழக்கமாய் செய்யும் வேலை தான்… வழக்கமாய் கேட்கும் சத்தம் தான்… வழக்கமான இடம் தான்… ஆனால் அடுத்த ஒரு நிமிடம் வழக்கமானதாய் இல்லை.

ஏதோ ஒரு படபடப்போடு அந்த சத்தத்தை கேட்டு ஹாலில் இருந்து வேகமாக வாஷிங் மெஷின் இருக்கும் இடத்திற்கு நடந்தேன். இன்னும் நான்கு அடியில் மெஷின். கீழே டைல்ஸ் தரையில் சோப்பு தண்ணீர் வழிந்திருக்க வந்த வேகத்தில் இரண்டு கால்களும் சறுக்கி இடது பக்கம் சாய்ந்து பட்டென்று விழுந்தேன்.

“ஆ…..” அதை தாண்டி என்னால் எதுவும் கூற முடியவில்லை.. முதுகில் வலி.. நெஞ்சில் அழுத்தம்.. கையில் வலி.. உடம்பில் வலி.. எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று உள்மனது சொன்னது. என்னால் எழ முடியவில்லை.

விழுந்த சத்தத்தை கேட்டு என் கணவர் என்னைத் தூக்க ஓடி வந்தார்.

“என்னாச்சு.. என்னாச்சு….” பதறியடித்து கொண்டு வந்தார்.

என்னால் பேச முடியவில்லை. மூச்சு விடவே சிரமமாக இருந்தது. என் கை பற்றி எழுப்பி உட்கார வைத்தார். கையைத் தூக்கவே முடியவில்லை. பயங்கரமான வலி.

Representational Image

என் அத்தையும் மாமாவும் ஓடி வந்தனர். “என்னாச்சு.. விழுந்துட்டாளா.. எங்க விழுந்தா.. அடி பட்ருச்சா..” அவர்களும் பதறியடுத்து பல கேள்விகள் கேட்டனர். என்னால் எதற்கும் பேச முடியவில்லை. தண்ணீர் கொடுத்தார்கள். பருகினேன்.

பிறகு நெஞ்சழுத்தம்.. படபடப்பு.. உடம்பு வலி மெல்ல தனிந்தது. இடது கை வலி தோள்பட்டை வலி அதிகமானது. கையை தூக்கவே முடியவில்லை என்று கத்தினேன். முதலில் அருகில் இருந்த சுளுக்கு எடுப்பவரிடம் என்னை அழைத்து சென்றனர்.

அவர் என் தோள்பட்டையில் வலி இருக்கிறது என்று சொன்ன இடத்தை தொட்டு பார்த்து விட்டு “எலும்பு முறிஞ்சிற்கு.. ஒரு எக்ஸ்- ரே எடுத்துட்டு வாங்க.. பாத்துட்டு கட்டு போட்றதா.. என்னன்னு பாத்துக்கலாம்”

“என்ன சொல்றிங்க.. எலும்பு ஒடஞ்சிருக்கா”

“நீ பதறாத.. எக்ஸ்-ரே பாத்துட்டு பேசிக்கலாம்” என்றார் கணவர்.

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் சில மருத்துவமனைகள் விடுமுறையில் இருந்தன.

பின் ஒரு எலும்பியல் மருத்துவமனைக்குச் சென்றோம். எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது.

“உங்களுக்கு கிளாவிக்கல் போன் ப்ராக்சர் ஆயிற்கு. தோள்பட்டைக்கிட்ட காறை எலும்புன்னு சொல்வாங்க.. அந்த எலும்பு ஒடஞ்சிற்கு.. அதனால தான் உங்களுக்கு கை தூக்க முடில.. ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணி அங்க ப்ளேட் வச்சிட்டா.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நீங்க நார்மல் ஆகலாம்.. இல்லனா உங்களால கைய முழுசா தூக்கவே முடியாது”

அவர் பேசப் பேச நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தேன். என் கணவரும் கலங்கி நின்றிந்தார்.

“நம்ம கிளம்பலாம்.. இங்க வேணாம்.. வாங்க வீட்டுக்குப் போலாம்”

என்ன பிரச்சனை என்று எனக்கு புரிந்துவிட்டது. ஆனால் அவர் அதை சொன்ன விதம் எனக்குப் பிடிக்கவில்லை. வெறும் தசையாக மட்டும் பார்த்ததாய் தெரிந்தது. என் மனநிலையை ஆறுதல் செய்யும் விதமாய் இல்லை.

இன்னும் இரண்டு மருத்துவமனையில் விசாரித்தபோது அவர்களும் அப்படியே கூறினார்கள்

என் அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லோரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

Representational Image

“எனக்கு ஆபரேஷன் வேண்டாம்..” மூணாவது மருத்துவமனையில் நின்றுக் கொண்டு கதறி அழுதேன்

“ஆபரேஷன் பண்ணாதான் சரி ஆகுமாம்.. எல்லா டாக்டரும் சொல்றாங்க.. ஆபரேஷனே பண்ணிக்கலாமே..” என்றார் என் கணவர்

“ஆபரேஷன்லாம் நான் பண்ணிக்க மாட்டேன்.. என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க”

“வீட்டுக்குப் போனா எப்படி சரி ஆகும்.. போலாம் போலன்னு எதுக்கு சொல்ற” என் அம்மாவும் அழுது கொண்டே கேட்டார்

“அம்மா.. நான் போய் கட்டுப் போட்டுக்கிறேன்மா.. எனக்கு ஆபரேஷன் வேணாம்.. மொதல்ல இங்க இருந்து போலாம்”

“கட்டுப் போட்டா ஆறு மாசம் ஆகும் சரியாக.. இது ஒரு சின்ன ஆபரேஷன் தான்.. அப்புறம் ஒரு மாசத்துல சரி ஆயிடும்” என்றார் மாமனார்

“ஆறு மாசம் ஆனாலும் பரவால்ல.. எதுக்கு இதுக்காக ஆபரேஷன் பணிக்கணும்”

காலம் முழுக்க அந்த அறுவை சிகிச்சையின் தாக்கம் இருந்து விடுமோ என்று நான் பயப்படுகிறேன். அவர்களோ இன்ஸ்டன்ட் முறையில் சரியாகும் என்பதையே கூறினார்கள்.

“எலும்பு கிராஸ்சா வளரவும் வாய்ப்பு இருக்கு கட்டுப் போட்டா.. இப்போ கூட நம்ம அத்தைக்கு அப்படி தானா ஆச்சு”

“பாஸ்கர் அண்ணாக்கு கூட தோள்பட்டை எலும்பு தானா ஒடஞ்சது.. இப்போ அவர் கட்டுப் போட்டே பழைய மாதிரி ஆயிட்டாருல”

என் அத்தை ஒரு எடுத்துக்காட்டுக் கூற.. நானும் எடுத்துக்காட்டுடன் பதில் கூறினேன்

Injection

“எதுக்கு நம்ம ரிஸ்க் எடுக்கணும்.. ஆபரேஷன் பண்ணிக்கோ.. நாங்கல்லாம் உன்னை பாத்துகிறோம்” அப்பா கூற… உடன் இருந்தவர்களும் திரும்பத் திரும்ப இதையே கூற.. அந்த வலியிலும் என்னால் முடிந்த வரை போராடிவிட்டு அதற்கு மேல் என்னால் பேச முடியாமல் அவர்கள் போக்கிற்கே நான் சென்று விட்டேன். இந்த காலத்தில் இப்படித்தான் சரியாக வேண்டும் என்று அவர்கள் வகுத்துவிட்டார்கள். அந்த நாகரீக உலகத்திற்குள் தான் நாமும் இயங்க முடியும்.

கைராசியான மருத்துவர் என்று அவர்கள் முடிவெடுத்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரத்தப் பரிசோதனை, எக்கோ மற்றும் தேவையான பிற பரிசோதனைகளும் செய்துவிட்டு திங்கட்கிழமை காலையில் அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறினார்கள்.

“இந்த பேஷண்டா 24 ரூம் நம்பர்க்கு கூட்டிட்டு போங்க”

“என்னை பேஷண்டுன்னு அந்த நர்ஸ் சொல்றாங்க” என்றேன் சற்று சிரித்துக் கொண்டே

“அந்தந்த இடத்துக்குப் போகும்போது அவங்க எப்படி சொல்வாங்களோ அதைத்தான கேட்டாகணும்.. மொதல்ல நீ எப்படி கீழ விழுந்த.. அப்போ தான பேசிட்டு உள்ள போன” என் கணவரும் சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘அய்யோ இனி அத வேற ஒவ்வொருத்தரா கேப்பாங்களே’

“தெரிலைங்க.. ரெண்டு காலும் வழுக்கிடுச்சி”

எப்படி எப்படியோ கீழே விழுந்திருக்கிறேன். சைக்கிள் ஓட்ட பழகும் பொழுது.. வண்டி ஓட்ட பழகும்பொழுது.. படி இறங்கும்பொழுது அறியாமல் நான்கு படி தாண்டி விழுந்துருக்கிறேன்.. மலை ஏறும்பொழுது.. இன்னும் எத்தனையோ முறை தடுக்கி விழுந்துள்ளேன்.. எந்த முறையும் இப்படி மருத்துவமனை ஆபரேஷன் என்ற அளவிற்கு வந்ததில்லையே

வீட்டிலேயே விழுந்ததற்கு ஆபரேஷனா! இதைத் தான் நேரம் என்கிறார்களா! அங்கே தண்ணீர் டைல்ஸ் தரைக்குக் கசிந்து வந்ததை பார்க்காமல் போனது தவறா! நிதானமாக போகாமல் கால் ஊன்றாமல் வேகமாக போனது தவறா! வழுக்கி எதையும் பிடிக்காமல் இடப்பக்கம் வேகமாக சாய்ந்தது தவறா!

என்ன நிகழ்ந்தது! இப்படித்தான் நாம் கண் அசரும் நேரத்தில் விபத்துகள் நடக்கின்றதா!

உடைந்திருந்த எலும்பு தோள்பட்டையில் குத்தி குத்தி வலிக்க ஆரம்பித்தது. கை அசைக்காமல் இருக்க பெல்ட் அணிவித்து இருந்தனர். கொஞ்சம் கை ஆட்டினாலும் வலி வாட்டி எடுத்தது. ஏதேதோ மாத்திரைகளும் ஊசியும் போட்டார்கள் அந்த அசதியில் தூங்கிப் போனேன்.

விடிந்தது..

“காலையில 10 மணிக்கு ஆபரேஷன்.. அதுவரைக்கும் அவளுக்கு எதும் சாப்பிட தரக் கூடாது மா.. உங்களுக்கு டீ வாங்கிட்டு வரட்டுமா” என்னுடன் தங்கியிருந்த கணவர் என் அம்மாவிடம் கேட்டார்.

அம்மாவும் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

மருத்துவமனை அறையில் இருந்த தொலைக்காட்சியில் பக்தி பாடல்கள் போட்டார் என் அம்மா

“7 மணிக்கு மகாபாரதம் மறுஒளிபரப்பு போடுவாங்க.. அது போடுங்களேன்” என்றேன் நான்

“10 மணிக்கு உனக்கு ஆபரேஷன்னு எங்களுக்கு பதட்டமா இருக்கு.. உனக்கு மகாபாரதமா”

“அதுக்கு என்ன பண்றது.. பாக்க தான ரூம்ல டிவிலாம்.. பரவால்ல எனக்கு பிடிச்சதா போடுங்க”

நர்ஸ்கள் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு செக் அப் ஆக செய்தார்கள். ஆபரேஷனுக்கு உண்டான ஊசிகள் போடுவதாக கூறினார்கள். அம்மாவின் உதவியோடு குளித்து (இனி ஆபரேஷனிற்கு பிறகு எப்பொழுது குளிக்க சொல்வார்களோ என்ற பயத்தில்) தயாராகினேன். ஆபரேஷன் உடை அணிவித்தார்கள். கை வலி ஒரு புறமும் அறுவை சிகிச்சை பயம் ஒரு புறமும் இருக்க கடவுளை வேண்டி படுத்து இருந்தேன்.

“கல்யாணம் ஆகி எட்டு ஒன்பது மாசம் கூட ஆகல.. பிரசவத்துக்கு அனுப்புவன்னு பாத்தா.. இப்படி கைய ஓடிச்சிட்டு ஆபரேஷன் தியேட்டர்க்கு போறாளே” என் அம்மா கத்தி புலம்பி அழ ஆரம்பித்து விட்டார்

என் அத்தை, மாமா, அப்பா, தங்கை என எல்லோரும் வந்துவிட்டனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர் என்னை உள்ளே கொண்டு செல்லும் பொழுது

எனக்கும் அழுகை வந்தாலும்.. ஒன்றும் ஆகாது.. இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு சென்றேன்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் நான் சென்ற பிறகும் சில நிமிடங்கள் அறுவை சிகிச்சைக்குத் தேவையானதை மருத்துவர்கள் தயார் செய்துக் கொண்டிருந்தனர். என்னை அந்த படுக்கையில் படுக்க வைத்து கை கால்களில் ஏதோ சொருகினார்கள். ஹார்ட் ரேட், பல்ஸ் ஆக இருக்கலாம். மூச்சு விட சிரமமாகவோ வேறு எதாவது சிரமம் வந்தாலோ சொல்லச் சொன்னார்கள். என் முகத்திற்கு அருகே லைட் கொண்டு வந்து வைக்கச் சொன்னார்கள். இன்னும் தேவையானதை அவர்கள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். எல்லாமும் என் சிந்தைக்குள்ளே சென்று கொண்டிருந்தது

மயக்க மருந்து கொடுப்பதற்கு என்றே இன்னொரு மருத்துவர் வந்தார்.

“இந்த அனஸ்தீசியா கைக்கு மட்டும் மரத்த உணர்வு தரும்… உங்களுக்கு பெருசா மயக்கம் மாதிரி வராது.. கைல இப்போ ஷாக் அடிச்ச மாதிரி ஆகும்.. ஆகுதா சொல்லுங்க”

கையில் சுரீரென்று ஷாக் அடித்த உணர்வு. கை தோள்பட்டை எல்லாமும் மரத்துப் போனது.

கத்தியை எடுத்துக் கொண்டு என் அருகே வந்தார்கள். கண்ணில் கருப்பு துணி போட்டார்கள். முகத்தை வலது தோள் பக்கம் திருப்பி வைத்தார்கள்

“வலி எதுவும் இருக்காதே.. அவ்ளோதான் சின்ன ஆபரேஷன் சீக்கிரம் முடிச்சரலாம்”

என் கையில் அவர் கிழித்துக் கொண்டே பேசினார். அவர் அறுக்கிறார் என்பது எனக்கு நன்றாக உணர முடிந்தது ஆனால் வலி இல்லை.

எனக்கு மயக்கம் இல்லை எனினும் ஒரு வித சோர்வால் கண் அயர்ந்தது. சக்தியற்ற நிலையில் படுத்து இருந்தேன். கை கால்களில் அவர்கள் குத்தியிருந்தது வலித்தது. என்னால் நகர முடியாத அளவிற்கு ஏதோ இறுக்கி வைத்திருந்தார்கள்.

சில நிமிடங்கள் அப்படியே இருந்தேன். பின்பு ஏதோ விழிப்பு வந்தவள் போல் தெளிவாக பேச ஆரம்பித்தேன்.

தையல் போடுவது வலி இல்லையெனினும் உணர முடிந்தது.

“என்ன பண்றிங்க.. பெரிய தையல் போடறீங்களா.. கண்ல இருந்து துணி எடுங்க..”

“அவ்ளோதான் முடியா போகுது.. 10 மினிட்ஸ்”

“இல்லை.. நீங்க என்னை ஏதோ பண்றிங்க.. அம்மாவ கூப்பிடுங்க.. என்னை விடுங்க”

தலையை ஆட்டி ஆட்டி கண்ணில் இருந்த துணியை விழ வைத்தேன். நர்ஸ் ஓடி வந்து என் தலையை பிடித்துக் கொண்டார்.

“என்ன வயசு ஆகுது” மருத்துவர் இன்னொரு மருத்துவரிடம் பேசினார்.

“26 ஆச்சு.. ஷி இஸ் ஒர்கிங்.. பயத்துல கத்றாங்க”

இரண்டு மருத்துவர்களும் சிரித்துக் கொண்டார்கள்.

Representational Image

“பிபி.. பல்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு.. ஸ்டிட்சஸ் போட்டாச்சு.. ரூம்கே மாத்றோம்.. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கணும்”

சிறிது நேரத்தில் என்னை வெளியில் கூட்டிச் சென்றார்கள். என் அம்மா அப்பா கணவர் எல்லோரும் காத்திருந்தனர். என்னைப் பார்த்ததும் அவர்களுக்கொரு நிம்மதி அவர்களைப் பார்த்ததும் எனக்கொரு நிம்மதி. அறைக்கு அழைத்துச் சென்றார்கள். எனக்கு தூக்கம் கண்ணைச் சொக்கியது. தூங்கிவிட்டேன்.

மீண்டும் எழும்பொழுது கை வலி என்னை வாட்டி எடுத்தது. அந்த வலி இப்படித்தான் இருந்தது என்று விவரிக்கத் தெரியவில்லை. படுக்கையில் இருந்து எழ வேண்டுமெனில் யாராவது தூக்கிவிட்டால் தான் முடியும். என்னால் தோளைத் தூக்க முடியவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். என் கணவர் என்னை தூக்குகிறார் என்னைப் பார்த்துக்கொள்கிறார் எனினும் என் அம்மா வீட்டில் என் அம்மாவுடன் இருக்கவே ஆசைப்பட்டேன்.

ஒவ்வொரு நாளை கடத்துவதும் சிரமமாக இருந்தது.

ஒரு நாள் தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தேன். ஹாலில் இருந்த கடிகாரம் 3.40 என்றது நேரத்தை. எனக்கு எழ வேண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது. என் அம்மாவும் தங்கையும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பினால் தான் என்னால் எழ முடியும். அம்மா உடன் வந்தால் தான் என்னால் செல்லவும் முடியும். ஒரு கை மடக்கி இடுப்பில் பேண்ட் போட்டு கட்டியிருக்கிறார்கள்.

‘இப்பொழுது நான் எழ வேண்டும் என்றால் கூட இன்னொருவர் உதவி தேவைப்படுகிறதே.. என்ன வாழ்க்கை இது.. இத்தனை நாள் நன்றாக இருக்கும்பொழுது இப்படியெல்லாம் ஆகும் என்று நினைத்தோமா.. வாழ்க்கை என்றால் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று எவ்வளவு திட்டம் போட்டிருக்கிறோம்.. இப்படி நம்மை படுக்கையோடு படுக்கையாக்கிவிட்டதே’

பல எண்ணங்கள் மனதில் சூழ நான் என்று நினைத்துக் கொண்டிருந்த ஏதோ ஒன்று உடைந்து கண்ணில் நீராய் வழிந்து கொண்டிருந்தது. வாழ்க்கை எனக்கு எதையோ உணர்த்துவது போல் இருந்தது.

எந்த சக்தியினாலோ அடுத்த ஐந்து நிமிடத்தில் என் அம்மா எழுந்து கொண்டார்.

“என்னாச்சு.. தூங்கலையா.. தண்ணி வேணுமா”

“பாத்ரூம் போணும் மா”

“கூப்பிட வேண்டியதுதான.. முழிச்சு தான் படுத்துருக்கேன்.. கூப்டு எதுனாலும்”

இந்த வயதிலும் என் அம்மா என்னை பார்த்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டேனே!

என் தங்கை ஒரு பக்கம் என்னைப் பார்த்துக் கொள்கிறாள். தையல் பார்த்தால் நான் பயந்துவிடுவேன் என்று என்னைத் திரும்ப விடாமல் அவளே பஞ்சால் துடைத்து மாற்றிவிடுவாள். டியூப் மாத்திரைகள் சாப்பிட கஷ்டபடுவேன் என்று உடைத்து நீரில் கரைத்து கொடுப்பாள்.

நாட்கள் இப்படி மெல்ல நகர்ந்தன. உறவினர்கள் சிலர் நலம் விசாரிக்க வந்தனர்.

“சந்து மேடு.. நேர் மேடுன்னு சொல்வாங்க.. கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலல.. மாலை வாசம் கூட வரும்னு சொல்வாங்க.. கண்ணு பட்ட மாதிரி கீழ தள்ளிடுச்சு.. பரவால்ல ட்ரிஷ்டி போய்டுச்சு”

“நல்ல வேளை இடது கை.. வலது கைனா எப்படி சாப்பிடுவ”

“கீழ விழுந்ததுல தலைல அடிபட்ருந்த.. எல்லாம் நல்லதுக்கே.. சின்ன அடி.. வளர பிள்ளைக்கு வேகமா எலும்பு கூடிடும்”

“ஆட்டுக் கால் சூப்.. உளுந்தங்கஞ்சி குடி.. ஒரு மாசத்துல எப்படி கூடுது பாரு கை”

“எனக்கு இருக்க ஒர்க் பிரஷர்க்கு எங்கயாவது போய் இடிச்சிக்கிட்டு படுத்துக்கலாம் போல இருக்கு.. இப்ப உனக்கு கிடைச்சிருக்க நேரத்துல நல்லா சாப்பிடு.. தூங்கு.. பாட்டு கேளு.. சந்தோசமா இரு”

ஒவ்வொருவர் கூறியதும் எத்தனை நிஜம். உண்மையில் தலையில் அடிப்பட்டிருந்தால்! இது ஒன்றும் பெரிய அடி இல்லை. யாவும் நன்மைக்கே.

Representational Image

படங்கள் பார்த்தேன்.. பாட்டு கேட்டேன்.. புத்தகங்கள் படித்தேன்.. பிடித்ததை சாப்பிட்டேன்.. தோன்றும்பொழுதெல்லாம் உறங்கினேன்..

ஒரு மாதத்திற்குள் தையல் பிரித்தாயிற்று. இரண்டு மாதத்திற்குள் பெல்ட் கழட்டிவிட்டு என் வேலைகளை நானே செய்து கொள்ளப் பழகினேன். மருத்துவமனைக்கு மாதம் ஒரு முறை பரிசோதனைக்குச் சென்று வந்தோம். கனமானவற்றை தூக்கக் கூடாது மற்றும் கை பயிற்சி தொடந்து செய்யச் சொன்னார்கள். மற்றபடி இயல்பாக இருக்க அறிவுறுத்தினார்கள்.

அலுவலகத்திற்குச் செல்லத் தொடங்கினேன். வெளிக்காற்றை சுவாசிப்பது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

பின் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் துணி துவைக்க அதே இடத்திற்குச் சென்றேன்.

எப்படி விழுந்திருப்போம்! முதல் சுற்று மெஷினில் ஓடியதும் தண்ணீர் எடுத்துவிடும் பொழுது ஓட்டை அடைத்திருந்ததால் தண்ணீர் முழுவதும் செல்லாமல் இந்த பக்கம் டைல்ஸ் நனைந்துவிட்டது. அந்த ஓட்டையில் இருந்த குப்பைகளை எடுத்திருக்க வேண்டும்.. இந்த பக்கம் சாக்கு அல்லது ஏதாவது துணி போட்டிருந்தால் டைல்ஸ் நனையாமல் இருந்திருக்கும்.. வரும்பொழுது கீழே தரையைப் பார்த்து நடந்திருந்தால் சோப்பு நீர் இருந்தது தெரிந்திருக்கும்.. மெதுவாக வந்திருந்தால் வழுக்கி இருந்தாலும் சமாளித்து இருக்கலாம்..

இதில் இத்தனை தவறுகள் என்னுடையதாய் இருந்தது. சரி இதுவும் நமக்கு ஒரு நல்ல பாடம்.

இனி ஒவ்வொரு செயலும் கவனமாக செய்ய வேண்டும் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது!

ரேவதி பாலாஜி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Previous Post Next Post