காவல்துறை அதிகாரிகள் இதைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் – இதுதான் அப்போதைய ரியர் வீல் டிரைவ் கொண்ட எஸ்யூவி. எப்படிப்பட்ட ஆஃப்ரோடுகளிலும் கிருட் கிருட் என ஏறும் தன்மை கொண்டது. அதுவும் கைதிகளை அடைத்துக் கொண்டு போகும் அளவுக்கு இடவசதி கொண்ட 10 சீட்டர் கார் என்றால், எந்தக் காவல்துறைக்குத்தான் பிடிக்காது. இதைவிட ராணுவத்தினருக்கு 4வீல் டிரைவ் சுமோவெல்லாம் தயாரித்து வழங்கியது டாடா. அப்போதே ஆஃப்ரோடு செய்யும்போது ட்ராக்ஷனைக் கட்டுப்படுத்தும் செல்ஃப் லாக்கிங் டிஃப்ரன்ஷியல் கன்ட்ரோல் போன்ற எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்களையெல்லாம் புகுத்தி இதைத் தயாரித்தது டாடா.
காவல்துறை, ராணுவத்தினர் மட்டுமில்லை; சினிமாக்காரர்களுக்கும் சுமோ பிடித்துப்போன ஒரு வாகனம். ஆக்ஷன் படங்கள் என்றால், சுமோ இல்லாமல் இருக்காது. ‘அயன்’ என்றொரு படத்துக்காக, கே.வி.ஆனந்த் டீம், ‘பழைய சுமோ கார் இருந்தா சொல்லுங்களேன்; ஃபைட் சீனுக்குத் தேவைப்படுது’ என்று என்னிடமே கேட்டார்கள். இன்னொரு சினிமா டீம் இப்படிக் கேட்டது: ‘‘அண்ணே, பொலேரோவையும் சுமோவையும் மோத விடணும்; எதுனா பழைய சுமோவும் பொலேரோவும் இருந்தா சொல்லுங்க!’’
எஸ்யூவி என்றால், கட்டுமானம்தான் முக்கியம். அதற்கு Body of Frame தான் சாத்தியம். அப்படி 88–களில் வெளிநாடுகளில் பிரபலமான டெல்கோலின் (Telcoline) எனும் எஸ்டேட் காரின் கட்டுமானமான X2 எனும் ப்ளாட்ஃபார்மில் இதை ரெடி செய்திருக்கிறார்கள். டெல்கோலினின் அதே 1,948 சிசி டீசல் இன்ஜின்தான் சுமோவிலும்.
அந்தக் காலத்தில் கில்லி மாதிரி சொல்லியடித்துக் கொண்டிருந்த ஓல்டு ஃபேஷன் மஹிந்திரா எம்எம் சீரிஸ் ஜிப்புகளுக்கெல்லாம் டஃப் கொடுத்தது சுமோ. காலப்போக்கில் சுமோவை அப்படியே சும்மா விட்டுவிடக் கூடாது என்று டாடாவும் ஓவர்டைம் பார்த்தது. சுமோ ஸ்பேசியோ, சுமோ விக்டா, சுமோ கோல்டு, சுமோ கிராண்டே என்று பல பெயர்களில் சுமோ வந்தது. இப்போதும்கூட தேனி, தேக்கடி, கம்பம், மேகமலை, மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் 10–க்கும் மேற்பட்ட மலைவாழ்ப் பணியாளர்களை அடைத்துக் கொண்டு மலையேறும் பழைய டாடா சுமோ விக்டாக்களை, சுமோ ஸ்பேசியோக்களை, சுமோ கோல்டுகளைப் பார்க்கும்போது, புல்லரிக்கத்தான் செய்யும்.
