"`சித்தா' திரைப்படத்தை `மகாநதி' படத்தோட ஒப்பிடுறது..." - `சித்தா' ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்

`சித்தா’ திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. எழுத்து ரீதியாக மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் இத்திரைப்படம் வலிமையுடன் வெளிவந்திருக்கிறது.

‘சித்தா’ திரைப்படம் நம்மை உள்ளே இழுத்ததற்கான காரணங்களில் ஒன்று அதன் லைட்டிங்கும் அழகுற அமைந்த ஃப்ரேம்களும்தான். இந்த அழகியலுக்குக் காரணமானவர் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம். ‘சித்தா’தான் இவருக்கு முதல் திரைப்படம். ஆனால், அதற்கு முன்பே ‘என்ஜாயி என்ஜாமி’ பாடலின் விஷுவல்களை நமக்கு விருந்தளித்திருந்தார். ‘சித்தா’ திரைப்படத்துக்காக அவரிடம் பேசினோம்.

மென்மையாக பேசத் தொடங்கிய அவர், “முதல்ல மக்கள் இது மாதிரியான கன்டன்ட் திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்குறது சந்தோஷமாக இருக்கு. நாம ஃபிலிம் ஸ்டுடண்டாக வர்றப்போ நிறைய கன்டன்ட் சார்ந்த படங்களைப் பார்த்திருப்போம். இந்த வரவேற்பு நிச்சயம் எனக்கு மட்டுமில்லாம இனி வர்ற பலருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும். விமர்சன ரீதியாகவும் ‘சித்தா’ திரைப்படத்துக்குப் பெரியளவுல வரவேற்பு கிடைச்சிட்டு இருக்கு.

தொழில்நுட்ப ரீதியாகவும் வழக்கமான பாரம்பரிய முறைகளைப் பின்பற்றாம கதைக்கு என்ன வேணுமோ அதைப் பண்ணிருக்கோம். இந்தப் படங்களுக்கெல்லாம் இது மாதிரியான தொழில்நுட்பங்களைப் பின்பற்றி பண்ணணும்ன்னு நாம முடிவு பண்ணிருப்போம். மக்களும் அதுக்கு நல்ல வரவேற்பைக் கொடுக்குறாங்க.

சமூகக் கருத்தைச் சொல்லும் போதும் அதுலேயே ரொம்ப மூழ்கடிக்காம, ரொம்பவும் கமர்ஷியல் முறையில பண்ணாம, நேர்மையாக இந்தப் படத்துக்காக வேலைப் பார்த்தோம். இது மாதிரியான கண்டன்ட்டை எப்படிச் சொல்லணும்ன்னு ரொம்பவே கவனமாக இருந்தோம்.

பாலாஜி சுப்ரமணியம்

பெற்றோர்களும் அவங்களோட குழந்தைகளுக்கு இந்தப் படத்தை காமிக்கனும். இந்தப் படத்தை பத்தி குழந்தைகள்கிட்ட பெற்றோர்கள் பேசணும்ன்னு கவனமாக இருந்ததுனாலதான் அதிகமான வன்முறை காட்சிகள் வைக்கல. நூறுல ஒரு படமாக ‘சித்தா’வைக் கடந்து போயிடக்கூடாதுன்னு ரொம்பவே உன்னிப்பாக வேலைப் பார்த்தோம். இது மாதிரியான சப்ஜெக்ட் கொண்ட கதைகள் நம்மகிட்ட வரும்போது அதுக்கு ரொம்ப பொறுப்போட வேலைப் பார்க்கனும். மக்களைத் திசை திருப்பக்கூடாதுன்னு சில வழிகளையும் பின்பற்றினோம். ரொம்பவே யதார்த்தமா வழிகள்தான் அது.

மக்கள் அடுத்தவங்களை எப்படிப் பார்ப்பாங்களோ அதை மையப்படுத்திதான் ஒளிப்பதிவுல வேலைப் பண்ணோம். பட்டொளி (Flare) இல்லாம, ஸ்டேடி கேம், டிரோன் கேமரா இல்லாம சில முறைகளைப் பின்பற்றி இந்தப் படத்தை ஒளிப்பதிவு பண்ணோம். எங்களுக்கு ‘சித்தா’ படத்துக்கு இந்தப் படங்கள்ல பண்ண மாதிரி ஒளிப்பதிவு பண்ணணும்ன்னு முன் உதாரணம் கிடையாது. எங்களுக்கு ‘சித்தா’ கதைதான் முன் உதாரணம்.

இந்தக் கதைல ஒருத்தனாக நான் இருந்து வேலை பார்த்தாதான் அதுல இருக்கிற அதே அசல்தன்மை கிடைக்கும்ன்னு ஐடியா பண்ணோம். அப்போதான் ரியலிஸ்டிக்கா இருக்கும். நாம சொல்ற ஒரு கருத்து பார்வையாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தணும். இல்லைன்னா வழக்கமான ஒரு படமாகக் கடந்து போயிடுவாங்க. நாங்க தியேட்டர்களுக்குப் போய் பார்க்கிறப்போ மக்கள் பாப்கார்ன் சாப்பிடுறது மாதிரியான சில வழக்கங்களை மறந்துட்டு உன்னிப்பாக ‘சித்தா’ படத்தைப் பார்த்துட்டு இருந்தாங்க.

‘சித்தா’ படத்துல நாங்க டிராக், ஜிம்மி ஜிப், கிரேன், ஸ்டெடி கேம் போன்ற தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்தவே இல்லை. ஒரு நீளமான காட்சிக்கு கிம்பல் மட்டும் பயன்படுத்தினோம். அதுவும் ரொம்ப நேரத்துக்கு கையில பிடிக்கமுடியாதுன்னு கிம்பல் யூஸ் பண்ணோம். அதையும் எடிட்டிங்ல அசைவுகளோட இருக்கிற மாதிரிதான் எடிட் பண்ணோம். நம்ம அன்றாட வாழ்க்கைல நாம சந்திக்கிற இயற்கை லைட்டிங்கை மையப்படுத்திதான் இந்தப் படத்துல யூஸ் பண்ணியிருக்கோம். இது சேலஞ்சிங்கான விஷயம்னுலாம் இல்ல!” என்றவர், பலருக்கும் பிடித்த ஆல்பம் பாடலான ‘என்ஜாய் என்ஜாமி’ உட்படப் பல பாடல்களின் மியூசிக் வீடியோகளுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அது குறித்து அவர், “மியூசிக் வீடியோ 5 நிமிஷம்தான் இருக்கும். ஆனா, மியூசிக் வீடியோவுக்குப் பாடலும் அதுக்கான விஷுவலும் ஈர்க்கிற வடிவுல இருக்கணும். இசைக்கு ஒன்றிப் போகுற மாதிரியான விஷுவலும் கண்டிப்பா இருக்கணும். டி20க்கும் டெஸ்ட் மேட்ச்சுகும் இருக்கிற வேறுபாடுதான் ஆல்பம் பாடல்கள்ல வேலைப் பார்க்குறதுக்கும் படங்கள்ல வேலை பார்க்குறதுக்குமான வித்தியாசம். படங்கள்ல நமக்கு வேலைப் பார்க்கிறதுக்கு அதிகமான நேரமும் கிடைக்கும். மியூசிக் வீடியோல முதல் 5 நொடிலேயே பார்வையாளர்களை ஈர்த்திடனும். படங்கள்ல முழுமையா இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை உட்கார வைக்கணும்.

‘என்ஜாய் என்ஜாமி’ பாலாஜி சுப்ரமணியம்

எனக்குக் குழந்தைகள்தான் முக்கியமான ஆடியன்ஸ். குழந்தைகள் தங்களுக்குப் பிடிச்சிருச்சுனா கண் சிமிட்டாம தொடர்ந்து பார்ப்பாங்க. நாங்க நிறையா மியூசிக் வீடியோ பண்ணிட்டிருந்தோம். அதுல ஒண்ணுதான் ‘என்ஜாய் என்ஜாமி’. முதல்ல 4 நிமிடங்கள் வரைக்கும் புட்டேஜஸ் எடுத்தோம். அதுக்கு பிறகு இன்னும் விரிவாகப் பண்ணலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணோம். திரும்ப ஒரு மாசம் இடைவெளிக்கு அப்புறம் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் வெளிபுரத்துல ஷூட் பண்ணோம். இரண்டு நாள்ல வெளிபுரத்துல எடுக்கிற ஷூட்டிங் முடிச்சிட்டோம்.

இந்த மியூசிக் வீடியோவோட டைரக்டர்தான் எடிட்டரும். அடுத்த 10 நாள்ல இந்த மியூசிக் வீடியோவையே ரிலீஸ் பண்ணிட்டோம். இந்த வீடியோக்குக் கிடைச்ச வரவேற்பும் பாராட்டும்தான் எனக்கு மேலும் பல விஷயங்கள் பண்றதுக்கு நம்பிக்கை கொடுத்துச்சு.

அதே மாதிரிதான் ‘சித்தா’வும். கிட்டத்தட்ட ‘சித்தா’ படத்துக்கு 1 1/2 வருஷத்துக்கு மேல படத்தோட இறுதிகட்ட வேலைகள் நடந்துச்சு. சீன்களுக்கு பின்னாடி இருக்கிற சில விஷயங்களை வி.எஃப்.எக்ஸ்ல அழிச்சோம். ஏன்னா, அரசியல் ரீதியாகவும் சரியான படமாக இருக்கணும். சீன்களுக்குப் பின்னாடி இருக்கிற சில விஷயங்கள் தேவை இல்லாத சில பேச்சுகளை உருவாக்கும். அதனால அரசியல் ரீதியாகவும் எந்தப் பிழையும் இருக்கக்கூடாதுன்னு வேலைப் பார்த்தோம். ஆடியோலையும் பல முன்னேற்றங்கள் எடுத்துட்டு வந்தாங்க. கலர் கிரேடிங்லையும் செயற்கை தன்மை இல்லாம தெரியனும்ன்னு ரொம்ப வேலைப் பார்த்தோம். ‘சித்தா’ படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டுதான் ‘காக்கா கதை’ ஆல்பம் சாங்க்ல வேலை பார்த்தேன்” என்றார்.

மேலும் தனது சினிமாத் துறையின் தொடக்கம் குறித்துப் பேசிய அவர், “நான் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் கிட்ட அசிஸ்டண்டா வேலைப் பார்த்தேன். ‘டார்லிங் 2’ படத்தோட ஷூட்டிங் பாதிலேயே வேலைப் பார்த்தேன். எஸ்.ஜே.சூர்யா நடிப்புல உருவான ‘இறவாக்காலம்’ படத்துலேயும் ‘ஆடை’, ‘சிந்துபாத்’ படங்கள்லயும் வேலைப் பார்த்தேன்.

பாலாஜி சுப்ரமணியம்

விஜய் கார்த்திக் கண்ணன் சில விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கார். அதுலேயும் வேலைப் பார்த்தேன். இதுமட்டுமில்லாம, ‘சதுரங்க வேட்டை’லையும் வேலைப் பார்த்திருக்கேன். ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்கள்ல ஒளிப்பதிவாளர் சக்தியோட வேலைப் பார்த்திருக்கேன். சொல்லப்போனா, அதுதான் என் கரியரோட தொடக்கம்.

எல்லோரும் ‘சித்தா’ படத்தை ‘மகாநதி’,’சுப்ரமணியபுரம்’ படத்தோட ஒப்பிட்டு பேசுறாங்க. நான் ‘சுப்ரமணியபுரம் படம் பார்த்துதான் சினிமாவுக்கு வரனும்ன்னு முடிவு பண்ணேன். ஒரு படத்தைப் பார்த்துட்டு மக்கள் வெளிய வரும்போது வேறு நபரா வரணும். அது மாதிரி அனுபவம் கொடுத்த படங்களோட ஒப்பிட்டுப் பேசும் போது முழுமையா இருக்கு. ஆனா, அதை நினைச்சு நாங்க வேலைப் பார்க்கல. எங்களுக்குப் பிடிச்சதை பண்ணணும்ன்னுதான் பண்ணோம்” எனப் பேசி முடித்தார்.

Previous Post Next Post