``ஸ்மார்ட்டா இருக்கீங்க... ஏன் திருமணம் பற்றி யோசிக்கல?"- மாணவிகளின் கேள்விக்கு ராகுலின் பதில் என்ன?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜெய்ப்பூரில் இருக்கும் மகாராணி கல்லூரிக்குச் சென்றிருந்தார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக ராகுல் கல்லூரிக்குச் சென்றதும் அவருக்கு கல்லூரி முதல்வர் காந்திமதி தலைமையிலான ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “உங்களது கல்லூரி நன்றாக இருக்கிறது. இங்கிருக்கும் கட்டடங்கள் என்னை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. அருமையான இடம்.

மாணவியுடன் ராகுல் காந்தி

நான் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டேன் என்பது உங்களுக்கு தெரியும். அதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்தேன். அப்போது, `நீங்கள் பட்டம் பெற்ற பிறகு என்ன செய்ய விரும்புகிறீர்கள்’ என அவர்களிடம் கேட்பேன். அதற்கு அவர்கள், `அதை செய்ய விரும்புகிறோம், இதை செய்ய விரும்புகிறோம்’ என தெரிவிப்பார்கள். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கேட்கும்போது, ‘பெற்றோருக்காகவே அதை செய்ய விரும்புகிறோம்’ என்பார்கள். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என கேட்டார்.

அதற்கு பதிலளித்த மாணவி ஒருவர், “அரசு வேலை எங்களுக்கு வேண்டாம் என பெற்றோரிடம் விவாதம் செய்கிறோம். நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை. அதற்கு அவர்கள், `அரசு வேலைக்கு முயற்சியாவது செய்யுங்கள். கிடைத்தால் நல்லது தானே. இல்லையென்றால் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். நீங்கள் நிலையாக இருக்க விரும்பினால் அரசு வேலையில் சேருங்கள்’ என்பார்கள்.

விண்வெளி

மேலும் பள்ளிகளிலும் எதிர்காலத்தில் நமக்கு இருக்கும் விருப்பம் பற்றி கூறப்படுவது கிடையாது. அதாவது, அறிவியல் பாடத்தை எடுத்தால் டாக்டர், சயின்டிஸ்ட் ஆகலாம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அறிவியல் பாடத்தைப் படித்தால் விண்வெளி வீரர்களாக ஆகமுடியும் என்பதைக் கூறுவதில்லை” என்றார். இதை கவனமாக கேட்ட ராகுல் காந்தி, “இது மிகவும் தெளிவான கருத்து” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், (இந்திய சமூக மற்றும் கல்வி முறை) உங்களுக்கு, விருப்பங்களை காட்ட மாட்டார்கள். நீங்கள் வேறு பல விஷயங்களை செய்ய முடியும் என அவர்கள் சொல்வதில்லை. 3 – 4 வழிகளை மட்டுமே தெரிவிக்கிறார்கள். எனவே உங்களில் பலரால் விருப்பப்படி செய்ய முடியாது. அதற்கு வருத்தப்படுவீர்கள். படிப்பதற்கு நீண்ட நேரம் செலவு செய்தும் எதுவும் நடக்காது. எனவே, நான் கல்வி முறையில் பிரச்னை இருப்பதாகக் கருதுகிறேன்” என்றார்.

இந்திய பொருளாதாரம்

பின்னர் பேசிய மாணவிகள் சிலர், “நீங்கள் ஒருநாள் பிரதமராகிவிட்டால் என்ன செய்வீர்கள்… அரசியல்வாதியாக இல்லாவிட்டால் என்னவாக இருந்திருப்பீர்கள்?” என்றனர். அதற்கு பதிலளித்த ராகுல், “இரண்டு விதமான பொருளாதாரம் இருக்கிறது. ஒன்று உற்பத்தி பொருளாதாரம். சீனா இதில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே நான் இந்தியாவில் அதை நிலைப்படுத்துவேன். அரசியல்வாதியாக இல்லாவிட்டால் ஆசிரியராக, உணவு சமைப்பவராக என பல ஐடியாக்கள் இருந்தன. ஆனால் அதில் ஏராளமான நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன” என்றார்.

“கல்லூரியில் உங்கள் க்ரஷ் யார்… அறிவாளியாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். ஆனால், திருமணம் குறித்து யோசிக்கவில்லை. உங்களுக்கு பிடித்த பயண இடம் என்ன… உங்கள் சருமத்தை அழகாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்?” என்ற கேள்விகளை மாணவிகள் கேட்டனர். அதற்கு, ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

ராகுல் காந்தி

அப்போது அவர், “ஏனென்றால் நான் எனது வேலையிலும் காங்கிரஸ் கட்சியிலும் முழுமையாகச் சிக்கிக்கொண்டேன். அதனால்தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை. நான் செல்லாத இடம், எனக்குப் பிடித்த இடம். புதிய இடங்களை நான் பார்க்க விரும்புவேன். எனக்கு பாகற்காய் மட்டும் பிடிக்காது. மேலும் பட்டாணி, கீரையும் பிடிக்காது. மற்ற அனைத்தையும் விரும்புவேன். என் முகத்தில் சோப்பு போடுவதில்லை. கிரீம்ஸ் தடவுவதில்லை. வெறும் தண்ணீரில் கழுவுவேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Previous Post Next Post