கொரோனா காலத்து ஆன்லைன் வகுப்புகள், பல பிள்ளைகளின் படிப்பு தொய்வடையாமல் பார்த்துக்கொண்டது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கையில் கிடைத்த ஸ்மார்ட் போனால் சில சிறுவர்களின் வாழ்க்கையே திசை மாறிச் சென்றுகொண்டிருக்கிறது. அது என்ன என்பதுபற்றி இன்றைய காமத்துக்கு மரியாதையில் பேசுகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

”அந்தப் பையன் தற்போது ஏழாவது படிக்கிறான். கொரோனா நேரத்தில் இரண்டு வருடம் ஆன்லைன் கிளாஸில் படித்தபோது எப்படியோ போர்ன் மூவிஸ் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். தற்போது அந்தப் படங்களைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அடிமையாகி விட்டான். ஒருநாள், அவன் சுய இன்பம் செய்தபடியே வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததை அவனுடைய அப்பா பார்த்துவிட்டார். உடனே கோபத்துடன் செல்போனை பிடுங்கியிருக்கிறார். போர்ன் மூவிகளுக்கு அடிமையாகிவிட்ட அவன், போனை பிடுங்கிய அப்பாவிடம் மூர்க்கமாக நடந்திருக்கிறான். பயந்துபோன அவனுடைய அப்பா என்னிடம் அழைத்து வந்தார்.
இருபது வயதுகளில் இருக்கிற இளைஞர்களுக்கு சமமான மூர்க்கதனத்துடன் அந்தச் சிறுவன் இருந்தான். ஆனால், அவனுக்கு12 வயதுதான். இந்த வயதில் இது மிக மிக மோசமான விஷயம்.
கடந்த சில வருடங்களாக போர்னோகிராபி பார்க்கிற வயது குறைந்திருக்கிறது. இது அபாயகரமான விஷயம். இந்த வயதில் போர்னோகிராபி, சுய இன்பம் என்று இருந்தால், மூளை வளர்ச்சியும், சிந்திக்கும் திறனும் குறைந்துவிடும். எந்தச் சாதனைகளும் செய்ய முடியாமல் போய்விடும். தற்போது அந்தச் சிறுவனுக்கு உளவியல் சிகிச்சை வழங்கப்படுகிறது. விரைவில் மீண்டு விடுவான் என நம்புகிறோம். கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை வாங்கினால் உங்கள் பிள்ளைகளும் கோபப்படுகிறார்கள் என்றால், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணியுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.
