திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து ரத்தன் டாடா அளித்திருந்த பேட்டி ஒன்றில், “நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்யும் அளவுக்குச் சென்றேன். ஆனால் நான் என் பாட்டியுடன் இருக்க வேண்டி, அவசரமாக இந்தியா திரும்பியதால் அது முடியாமல் போய்விட்டது. நான் திருமணம் செய்யக்கூடிய நபர் விரைவில் இந்தியா வந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

ஆனால் இந்தியா மற்றும் சீனா இடையே போர் ஏற்பட்டதால் நான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை அவரின் பெற்றோர் இந்தியாவிற்கு வர அனுமதிக்கவில்லை. இதனால் நான் திருமணமே செய்துகொள்ளவில்லை. அதன் பிறகு மற்ற உறவுகள் வந்தன. ஆனால் மனைவி என்று அழைக்கக்கூடிய நபரைக் கண்டுபிடிக்கவில்லை. அதன் பிறகு எனது வாழ்க்கை சிக்கலான ஒன்றாகிவிட்டது. வேலை மற்றும் அடிக்கடி பயணம் காரணமாக என்னைப் பற்றிச் சிந்திக்க எனக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. இப்போது அதனை திரும்பிப் பார்க்கிறேன்.

ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை. சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். என் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் நான் படித்த பள்ளியில் என்னைக் கிண்டல் செய்தனர். ஆனால் இதிலிருந்து மீண்டு வர என் பாட்டி எனக்கு உதவி செய்தார்” என்று தெரிவித்தார்.
