குருவருள் தரிசனம் 5: பசியும் தாகமும் கடந்த மகான் - வறண்ட கிணற்றில் ஊற்றெடுத்த அதிசயக் கதை!

“வெயிலோ மழையோ உழைக்காமல் சாப்பிட இது ஒரு வழியா… கைகால்கள் நன்றாகத் தானே இருக்கிறது. உழைத்து சாப்பிட முயல். இங்கிருந்துபோ. நான் கொண்டுவந்திருக்கும் தண்ணீர் எனக்கு மட்டுமே ஆனது. மேலும் அதை நான் அருந்தவில்லை என்றால் என்னால் உழைக்க முடியாது. உழைக்கவில்லை என்றால் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லை என்றால் இந்த ஊர் மக்களுக்கு வரும் காலத்தில் உணவு இல்லை. என் நேரத்தை வீணடிக்காதே… போ இங்கிருந்து” என்று எரிந்து விழுந்தார்.

கஜானன் மகராஜ் உள்ளூர சிரித்துக்கொண்டார். பசியும் தாகமும் அவரை என்ன செய்யும்? சாதுக்கள் ஆண்டுக்கணக்கில் உண்ணாமலும் அருந்தாமலும் வாழும் ஸித்தி கைவரப்பெற்றவர்கள்.

சில நாள்களுக்கு முன்பு பிம்பால்காவ் கிராமத்துக்குச் சென்ற கஜானன் மகராஜ் அங்கிருந்த பழைய சிவன் கோயிலின் வாசலில் நிஷ்டையில் அமர்ந்துவிட்டார். அது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் என்பதால் ஜனநடமாட்டம் இல்லாமல் இருந்தது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் மட்டும் அந்தப் பகுதிக்கு வந்துபோவார்கள். அவர்கள் ஒரு சாது நிஷ்டையில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் அருகே வந்தார்கள்.

கஜானன் மகராஜ்

கஜானன் மகராஜ்

அவரை ஒருவன் தொட்டுப் பார்த்தான்.

“டேய் உடல் சூடாக இருக்கிறது. மனுஷன் உயிரோடுதான் இருக்கிறார்” என்றான்.

“அடப் போக்கிரி அப்படி எல்லாம் சொல்லாதே… அவர் சாது. மரியாதையாகச் சொல்” என்றான் மற்றவன்.

“யாராக இருந்தால் என்ன… ஒருவன் தொடும்போது உணர்ச்சி இருக்காதா… கண் திறந்து பார்க்க மாட்டாரா?”

“சாதுக்கள் அப்படித்தான். நீ சின்னப்பையன் உனக்கு விஷயம் தெரியாது. நம் ஊரில் இதற்கு முன்பு கூட ஜலந்தர் என்று ஒரு சாது இருந்தாராம். அவர் 12 ஆண்டுகள் நிஷ்டையில் இருந்தார் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“சரி… இப்போ என்ன செய்வது? இவர் கண் விழிப்பாரா… எப்போது விழிப்பார்? இவருக்குப் பசிக்காதா? ஒருவேளை இரவு கண்விழித்தால் இவருக்குப் பசிக்குமே… என்ன செய்வார்?”

“ம்… அவ்வளவு அக்கறை இருந்தால் உன் பங்கு ரொட்டியை வைத்துவிட்டுவா. அவர் வேண்டும்போது சாப்பிட்டுக் கொள்ளட்டும்.”

இப்படி சிறுவர்கள் ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டனர்.

Previous Post Next Post