``மனதில் பட்டதைப் பேசுபவனாக இருக்கக் காரணம் இதுதான்!" - செல்லூர் ராஜூ ஓப்பன் டாக்

அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் 20-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கட்சியின் அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் ஏற்பாட்டில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நான் சின்ன பையனாக இருக்கும்போதே எம்.ஜி.ஆர் ரசிகன். எனக்கு அப்பா கிடையாது, சகோதரர்கள் கிடையாது. அம்மாவும், சகோதரிகளும்தான் உண்டு. தலைவரைப் பார்த்து வளர்ததால்தான் நான் ஒழுக்கமானவனாகவும், மனதில் பட்டதைப் பேசுபவனாகவும் இருக்கிறேன். படிப்படியாக முன்னேறி பத்து ஆண்டுகள் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். என் நேர்மையைப் பார்த்துதான் ஜெயலலிதா என்னை உலகறியச் செய்தார். தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. முன்பு பள்ளிகளில் மிட்டாய் விற்றார்கள். இப்போது கஞ்சா மிட்டாய் விற்கிறார்கள்” என்றார்.

பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டலினுக்கு நிர்வாகத் திறமை இல்லை. தக்காளி விலை உயர்ந்துவிட்டது. ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்யாமல், நடமாடும் கடைகள் மூலம் தெருக்களில் விற்பனை செய்யலாம். அப்போதுதான் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும். ஆனால் இது முதலமைச்சருக்குத் தெரியவில்லை. கமிஷன் கலக்‌ஷன் எப்படி வரும் என்றுதான் அவர் பார்க்கிறார்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

எப்போது இ.டி சோதனை வரும் என்ற பயத்திலேயே ஸ்டாலின் இருக்கிறார். ஏற்கெனவே தூக்கம் இல்லாமல் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் தூங்கிப் பல மாதங்களாகி இருக்கும் என்று நினைக்கிறேன். தி.மு.க ஆட்சி ஊழல் நிறைந்தது. மதுபாட்டிலில் அரசு நிர்ணயித்த விலையைவிட 10 ரூபாய் கூடுதலாக கமிஷன் வாங்கலாம் என்று கண்டுபிடித்தது தி.மு.க ஆட்சியில்தான். 3,000 பார்களை அனுமதியில்லாமல் நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை முதல்வர் குடும்பத்துக்கு அனுப்புவதாகக் கூறுகிறார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

இதைத்தான் அன்றே சர்காரியா கமிஷன் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என கருணாநிதியைச் சொன்னார்கள். அப்பாவை மிஞ்சும் வகையில் ஸ்டாலின் உள்ளார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீதும் ஊழல் பட்டியல் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அது சும்மா சொல்கிறார்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது செந்தில் பாலஜியை ஊழல்வாதி என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது ஏன் செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு பயப்படுகிறார்கள். செந்தில் பாலாஜியை அனைத்து அமைச்சர்களும் ஆஸ்பத்திரியில் போய் பார்த்தார்கள். அதே சமயம் அமைச்சர் பொன்முடியை யாரும் பார்க்கவில்லை. ஏனெனில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைக்கிறார்கள்.

அ.தி.மு.க கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ

கொடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கேட்கிறீர்கள். ஆனால் அவரின் மகன்மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்திருக்கிறார். அது தொடர்பாக இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்திருக்கிறார்கள். தலையில் இருக்கும் வரைதான் முடி. கீழே விழுந்தால் அது மயிர். நாங்கள் மயிரைப் பற்றி கவலைப்படவில்லை. ஓ.பி.எஸ்ஸும், டி.டி.வி.தினகரனும் மயிருக்குச் சமம்தான். எவ்வளவோ பேர் அ.தி.மு.க-வை விட்டுச் சென்றிருக்கின்றனர். கட்சியில் துரோகம் செய்துவிட்டு போனவர்கள் பேசத்தான் செய்வார்கள். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது இயக்கத்தை வளர்க்க கொள்கைரீதியாகப் பாதயாத்திரை செல்கிறார்” என்றார்.

Previous Post Next Post