கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கஸ்டடி எடுத்து விசாரணை செய்யும் நிலையில், கரூரில் நடைபெற்று வரும் சோதனையால், அவரின் ஆதரவாளர்கள் கலத்தில் இருக்கின்றனர்.
கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ராம் நகர்ப் பகுதியில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட பங்களா வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று மதியத்திலிருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த பங்களா வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், தற்போது இங்கு அமலாக்கத்துறையினரும் சோதனையை மேற்கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்பாக, செந்தில் பாலாஜியின் ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனையிடச் சென்ற அதிகாரிகள், 15 நிமிடங்களுக்குள் அவர்கள் வந்த வாகனத்திலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதிகாரிகள் இந்தப் பகுதிக்கு வரும்போது கொண்டு வந்த ஆவணங்கள் சிலவற்றை சோதனையிடுவதற்காக, ஆடிட்டர் அலுவலகத்துக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராம் நகர்ப் பகுதியில் அசோக்குமார் கட்டிவரும் பிரமாண்ட பங்களா வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனையைத் தொடங்கியபோது, கட்டுமானப் பணி நடைபெறும் சுற்றுச்சுவரின் கதவில், `அசோக்குமார் நேரில் ஆஜராக வேண்டும்” என சம்மன் ஒட்டியிருந்தனர்.
