பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் ஏற்கெனவே பழங்குடியல்லாத மற்றும் பழங்குடி சமூகத்துக்கிடையே மூன்று மாதங்களாக வன்முறை நடந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது பா.ஜ.க ஆளும் இன்னொரு மாநிலமான ஹரியானாவில், நூஹ் பகுதியில் கலவரம் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் என்பவரால் தொடங்கிவைக்கப்பட்ட, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியில் திடீரென இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மேலும் இதில் ஏராளமான கடைகள், வாகனங்கள், மசூதிக்குத் தீவைக்கப்பட்டது. இரண்டு நாள்களாக நீடிக்கும் இந்தக் கலவரமானது இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாமல் நிலைமை மோசமாகிக்கொண்டே இருக்கிறது. எதிர்க்கட்சிகள் பலவும் கலவரத்தைக் கட்டுப்படுத்துமாறு இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், எங்களால் எல்லோரையும் பாதுகாக்க முடியாது என முதல்வர் எம்.எல்.கட்டார் தெரிவித்திருக்கிறார்.
கலவரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எம்.எல்.கட்டார், “கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்திருக்கிறது. இதுவரை 119 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனி திட்டம் தொடங்கப்படும். மேலும், கலவரத்தில் தாங்கள் இழந்தவை குறித்து மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசின் போர்டல் (Portal) மூலம் மதிப்பீடு செய்யப்படும். பொதுச் சொத்து இழப்புக்கு அரசாங்கமே இழப்பீடு வழங்கும். ஆனால், தனியார் சொத்தைப் பொறுத்தவரை, இழப்பை ஏற்படுத்தியவர்கள் அதை ஈடுசெய்ய வேண்டும். அதற்கென்று தனிச் சட்டத்தை நாங்கள் இயற்றியிருக்கிறோம்.

கலவரத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படையினரின் குடும்பத்துக்கு தலா ரூ.57 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். நூஹ், பல்வால், குருகிராம், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் 20 மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதோடு நூஹ் பகுதியில் பசுக்களைப் பாதுகாப்பது பெரிய பிரச்னை. எனவே, சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் பசு பாதுகாப்புக்கு முஸ்லிம் இளைஞர்கள் முன்வர வேண்டும். அதேசமயம் கலவரத்தின் பின்னணியில் இருக்கும் சதியை மாநில அரசு வெளிக்கொண்டுவரும். எனவே, அமைதியையும் நல்லிணக்கத்தையும் நாம் பேண வேண்டும். எப்படியிருந்தாலும் எங்களால் எல்லோரையும் பாதுகாக்க முடியாது. காவல்துறையோ, ராணுவமோகூட அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று கூறினார்.
