ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா என்ற இடத்தில் கடந்த 2-ம் தேதி தோட்டத்துக்கு ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். அதோடு அவருடைய உடலை நிலக்கரி அடுப்பில் வைத்து எரித்தனர். எரிக்கப்பட்ட உடலின் எஞ்சிய பகுதி அங்குள்ள குளத்தில் 4-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஐந்து பேரைக் கைதுசெய்தனர். இந்தக் குற்றத்தில் ஆறு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் சேர்ந்து ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

குடும்ப முன்பகை காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எரிக்கப்பட்ட சிறுமியின் உடலின் எஞ்சிய பகுதி இன்று தகனம் செய்யப்பட்டது. இதில் மைனர் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். இறுதிச்சடங்கின்போது மைனர் பெண்ணின் தந்தை சிதையில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் அருண் கவுர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கை சரியாக விசாரிக்காத சப்-இன்ஸ்பெக்டர், பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பில்வாரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் சித்து இது குறித்து, “இந்தக் குற்றம் அரிதினும் அரிதானது. எனவே, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க செய்ய முயற்சி எடுக்கப்படும். விரைவு நீதிமன்றத்தின் மூலம் இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றத்தில் நான்கு பெண்கள் உட்பட 10 பேர் ஈடுபட்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
